தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகராக இருப்பவர் போண்டாமணி. இவர் சென்னை போரூரில் உள்ள ஐயப்பன் தாங்கல் பகுதியில் வசித்து வருகிறார். சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்ட போண்டாமணி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது நடிகர் போண்டாமணியை பார்ப்பதற்கு திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் பிரத்தீவ் என்பவர் வந்துள்ளார். இவர் போண்டாமணியிடம் நான் உங்களுடைய மிகப்பெரிய ரசிகர் என்று கூறி அவருடனே மருத்துவமனையில் தங்கி அவருக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்து வந்துள்ளார்.
கடந்த மாதம் 27-ஆம் தேதி போண்டாமணி சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பிய போது ராஜேஷ் உடன் சென்றுள்ளார். அங்கு ராஜேஷ் போண்டாமணியை மிகவும் பாசமான முறையில் கவனித்துள்ளார். இதை உண்மை என நம்பிய போண்டா மணியின் மனைவி மாதவி தன்னுடைய கணவரின் ஏடிஎம் கார்டை ராஜேஷிடம் கொடுத்து மருந்து வாங்கி விட்டு வருமாறு கூறியுள்ளார். ஆனால் ஏடிஎம் கார்டை எடுத்துச் சென்ற ராஜேஷ் வீட்டிற்கு திரும்ப வரவே இல்லை. அதன்பிறகு சிறிது நேரம் கழித்து போண்டாமணியின் மனைவியின் செல்போனுக்கு உங்கள் ஏடிஎம் கார்டில் இருந்து 1,04,941 ரூபாய்க்கு நகை வாங்கியுள்ளதாக மெசேஜ் வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாதவி மற்றும் போண்டாமணி ராஜேஷ் மீது போரூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராஜேஷ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த விசாரணையின் போது ராஜேஷ் பல ஊர்களில் பெருமாள், குரு, தீனதயாளன், தினேஷ் போன்ற பல பெயர்களில் மோசடி வேலையில் ஈடுபட்டது தெரிய வந்தது. அதன்பிறகு ராஜேஷ் மீது சென்னை எழும்பூர், ரயில்வே காவல் நிலையம், கருமாத்தூர் மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்ட பல காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவாகியிருப்பதும் தெரியவந்தது. மேலும் உடல் நலக் கோளாறால் அவதிப்பட்டு வரும் போண்டாமணியிடம் பணம் திருடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.