தமிழ் சினிமாவில் பருத்திவீரன், மௌனம் பேசியதே, ராம், ஆதிபகவன் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் அமீர். இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வடசென்னை படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார். இந்நிலையில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட அமீர் தற்போது போதைப்பொருள் விழிப்புணர்வு மற்றும் ஆரோக்கியமான வாழ்வு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக செப்டம்பர் 17 மற்றும் 18-ஆம் தேதிகளில் மதுரையில் உள்ள கேஎல்என் இன்ஜினியரிங் கல்லூரியில் தேசிய அளவிலான உடல் கட்டமைப்பு மற்றும் உடற்தகுதி போட்டியை நடத்துகிறார். இது குறித்து இயக்குனர் அமீர் கூறியதாவது, பொதுமக்கள் ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கத்தில் இருந்து விலகி விட்டனர்.
முன்பு போல் பொதுமக்கள் தங்களுடைய ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. மேற்கத்திய பழக்கவழக்கங்களை பின்பற்றுவது போன்று அவர்களுடைய உணவு பழக்க வழக்கங்களையும் பின்பற்ற ஆரம்பித்து விட்டோம். ஆரோக்கியம் என்பது இளைஞர்களின் மத்தியில் அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது. நடிகர்கள் மட்டும்தான் பிட்டாக இருக்க வேண்டும் என்ற நம்பிக்கை பரவலாக இருக்கிறது. அது உண்மை கிடையாது. சில வருடங்களுக்கு முன்பு வரை கல்லூரி மாணவர்களுக்கு தேர்ச்சி மட்டும் தான் குறிக்கோளாக இருந்தது. ஆனால் தற்போது போதைப்பழக்கம் இல்லாமல் மாணவர்கள் கல்லூரியை விட்டு வெளியேறுவதே கடினமான ஒன்றாக மாறிவிட்டது. இது மிகவும் ஆபத்தான மற்றும் ஏமாற்றம் அளிக்கும் போக்காகும். விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியின் மூலம் போதை பொருட்களில் இருந்து விலகி நிற்கலாம் என்றார்.