மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மனு கொடுப்பதற்காக சென்ற பெண் திடீரென உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்கும் முயற்சி செய்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் பெண் கூறியதாவது, நான் மேளக்களத்தூர் பகுதியில் வசித்து வருகிறேன். எனது பெயர் மலர். நான் எனது தாய் நாகம்மாளிடமிருந்து நிலத்தை விலை கொடுத்து வாங்கினேன்.
தற்போது அறுவடை செய்ய இருந்த நேரத்தில் எனது அண்ணன் நெல்லை அறுவடை செய்துள்ளார். இதுகுறித்து போலீசில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் மன உளைச்சலில் தற்கொலைக்கு முயன்றதாக மலர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.