கலெக்டர் அலுவலகத்தில் அண்ணன், தம்பி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள்கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனு அளித்துள்ளனர். இந்நிலையில் கிருஷ்ண கவுண்டனூர் கிராமத்தில் வசிக்கும் கந்தசாமி என்பவர் தனது குடும்பத்தினருடன் மனு கொடுக்க சென்றுள்ளார். அப்போது கந்தசாமியின் மகன்களான குமார், நடராஜன் ஆகிய இருவரும் உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர். அப்போது கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில் அவர்கள் கூறியதாவது, கந்தசாமி குடும்பத்தினருக்கு சொந்தமான நிலத்திற்கு செல்லும் பொது வழி பாதையை ஒருவர் ஆக்கிரமித்துள்ளார். அந்த நிலத்தில் வேலி அமைத்ததை கந்தசாமியின் குடும்பத்தினர் தட்டி கேட்ட போது அவர்கள் தாக்க முயன்றனர். எனவே ஆக்கிரமிக்கப்பட்ட பொது வழி பாதையை மீட்டு தருமாறு ஏற்கனவே மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தீக்குளிக்க முயன்றதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அதிகாரிகளும், போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.