சென்னை, பூந்தமல்லி அருகே மனைவியின் மீது சந்தேகப்பட்டு அவரை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை பூந்தமல்லி சேர்ந்த நூரூதீன் என்பவருக்கும், ஹசீனா பேகம் என்பவருக்கும், திருமணமாகி பல ஆண்டுகள் ஆகிறது. அல்தாப் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். நூறுதீன் பெட்ரோல் பங்கில் வேலை செய்து வருகிறார். அவரது மகன் அல்தாபும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இந்நிலையில் கடந்த 19 ஆம் தேதி ஹசீனா பேகம், மகள் செல்போனில் தொடர்பு கொண்டு தாயிடம் பேச முயற்சித்துள்ளார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை.
பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது அங்கு தாய் கொலை செய்யப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் கதறி அழுத சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர். போலீசாருக்கு தகவல் அனுப்பப்பட்டு அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். விசாரணையில் நூரூதீன் வேலைக்கு செல்வதற்கு முன்பு மனைவியை வீட்டில் வைத்து பூட்டி விட்டு செல்வதும், வேலைக்கு சென்று அடிக்கடி வீட்டிற்கு வந்து சோதனை செய்வதுமாக இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று மகன் வேலைக்கு சென்றதும், கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஹசீனா பேகத்தை சரமாரியாக தாக்கி கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார். அவரை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர்.