நகைச் சீட்டு மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
சென்னையில் உள்ள போரூர் சந்திப்பில் மனோஜ் என்பவருக்கு சொந்தமான நகைக்கடை உள்ளது. அந்த நகைக்கடையில் 1000-ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாதந்தோறும் ரூபாய் 500 முதல் ரூபாய் 1500 வரை தீபாவளிக்காக நகை சீட்டு போட்டு வந்துள்ளனர். இதனையடுத்து நகைச் சீட்டு செலுத்தியவர்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு முன்பாகவே நகை, வெள்ளிப்பொருட்களை அளிக்க வேண்டும். ஆனால் கொடுக்காமல் நகைக்கடையை சேர்ந்த உரிமையாளர்கள் சீட்டு பணத்தை ஏமாற்றி விட்டு பல லட்சம் ரூபாய் மோசடி செய்து கடையையும், வீட்டையும் பூட்டி தலைமறைவாகிவிட்டனர்.
இதனை அறிந்த பொதுமக்கள் போலீசில் புகார் அளித்ததுடன், நகை கடையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போலீசார் பொதுமக்களை சமாதானம் செய்து வைத்தனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் போலீசாரிடம் கொடுத்த புகாரில் அவர்கள் எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால் நேற்று முன்தினம் காலை நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் நகைக்கடையை முற்றுகையிட்டு, சாலை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள். பின்பு அனைவரும் நகை கடை முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து போரூர்-ஆற்காடு சாலை பகுதியில் செல்லும் போக்குவரத்து வாகனங்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. இதைப்பற்றி தகவலறிந்து வந்த வளசரவாக்கம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் வாக்குவாதத்தில் பொதுமக்கள் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்திற்குப்பின் சாலை மறியலில் உள்ள அனைத்து பொதுமக்களையும் போலீசார் அனைவரும் சேர்ந்து சமாதானம் செய்து கூட்டத்தை கலைக்க செய்தனர்.