நகை கடன் தள்ளுபடி செய்யாத நபர்கள் கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தியுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் களை தள்ளுபடி செய்யாத பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஒன்றிணைந்து கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். இதில் நகை கடன் தள்ளுபடி அறிவிப்பு வந்த பின் வட்டி கட்டிய அனைவருக்கும் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும் குடும்பத்தில் ஒருவருக்கு 5 சவரன் நகை அடமானத்தை அனைவருக்கும் திருப்பித் தரவேண்டும் எனக் கூறி பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் மேல்முறையீடு செய்து ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, ராஜபாளையம், திருத்தாங்கள் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் நகை கடன் தள்ளுபடி ஆகாதவர்கள் சுமார் 150-க்கும் மேற்பட்டவர்கள் கையில் மனுவை ஏந்தி போராட்டம் நடத்தியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் விஜய முருகன் பேசியபோது, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியாக குடும்பத்தில் ஒருவருக்கு நகை கடன் தள்ளுபடி செய்வோம் என சொல்லியதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆதரித்தார்கள்.
ஆனால் முதலமைச்சர் ஆன பின் பல நிபந்தனைகளை கூறி தமிழகத்தில் 14 லட்சம் பேருக்கு மட்டும் தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவிப்பு கொடுத்திருக்கிறார். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. வங்கிகளில் தள்ளுபடி செய்யப் படாமல் இருக்கும் நகைகளுக்கு வட்டி கட்ட வேண்டும் இல்லை என்றால் நகைகள் ஏலம் விடப்படும் என கூறியதால் லட்சக்கணக்கான மக்கள் வங்கிகளில் வட்டி கட்டியிருக்கின்றனர். இதனை திருப்பி தரவேண்டும். நகைகளையும் திருப்பித்தர வேண்டும் தமிழக முதலமைச்சர் கடன் தள்ளுபடி ஆய்வு செய்து அனைவருக்கும் நகை கடன் தள்ளுபடி அறிவிக்க வேண்டும்.
இல்லையென்றால் தமிழக முதல்வர், அமைச்சர்கள் இந்த பகுதிக்குள் வந்தால் கருப்புக்கொடி காண்பித்து எங்களுடைய எதிர்ப்புகளை தெரிவித்து போராட்டங்கள் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார். நகை கடன் தள்ளுபடி செய்யாவிட்டால் முதல்வருக்கே கருப்புக் கொடி காட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது அடுத்தடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.