கடந்த ஆண்டு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி கிடையாது என்று தமிழக அரசு அதிரடியாக தெரிவித்துள்ளது.
கூட்டுறவு வங்கிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக தங்க நகைகளுக்கு கடன் வழங்கப்பட்டு வருகின்றது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக திமுக அரசு நகை கடன்களை தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி அளித்திருந்தது. இதனால் 5 சவரன் வரை உள்ள நகை கடன்களை தமிழக அரசு சமீபத்தில் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது. அதன்படி கடன்களை தள்ளுபடி செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் வெவ்வேறு வங்கிகளில் நகை கடன் பெற்றுள்ளனர். சிலர் வங்கி அதிகாரிகள் துணையுடன் போலி நகைகளை அடகு வைத்தது தெரியவந்தது.
இதனால் கூட்டுறவு சங்க நகைகடன்களை ஆய்வு செய்யுமாறும், அந்த பணியை நவம்பர் 30-ஆம் தேதிக்குள் முடிக்கும்படி கூட்டுறவு துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அவகாசம் முடிந்து ஆய்வு முடிவடையவில்லை. தங்க நகைகளை திரும்ப வழங்கக்கோரி கூட்டுறவு வங்கிகளுக்கு நகைகளை அடமானம் வைத்தவர்கள் சென்றபடி உள்ளனர். இந்நிலையில் இம்மாத இறுதிக்குள் நகைக்கடன் ஆய்வு முடிக்க அதிகாரிகளுக்கு கெடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், பொங்கலுக்கு அடமானமாக வைத்த நகைகளை வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது .
இந்நிலையில், தற்போது கடந்த ஆண்டு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி கிடையாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. நகை கடன் தள்ளுபடி பெறும் பயனாளிகளின் பட்டியலை இறுதி செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நகைக்கடன் பெற்ற 48, 84, 726 பெயரில் 35,37, 697 பேருக்கு நகை கடன் தள்ளுபடி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 25% பேர் மட்டுமே நகை கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்கள். 2020இல் கூட்டுறவு வங்கியில் பயிர் கடன் பெற்றிருந்தால் நகை கடன் தள்ளுபடி சலுகையை பெற முடியாது என்றும் தெரிவித்துள்ளது. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.