நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக சோதனை செய்தனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் சுப்பிரமணிய நகர் பகுதியில் மாவட்ட நகரில் ஊரமைப்பு அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு வீட்டுமனை பிரிவு மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு அனுமதி வழங்க விண்ணப்பம் செய்யும் நபர்களிடம் அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக புகார்கள் வந்தது. அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மாவட்ட நகரமைப்பு அலுவலகத்தில் திடீரென சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கார் ஓட்டுநரான கிருஷ்ணன் என்பவரிடமிருந்த 5,300 ரூபாய் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் நிலத்திற்கு அனுமதி வாங்க வெளியூரிலிருந்து வந்திருந்த வெங்கடேஷ் என்பவரிடம் 16,000 ரூபாய், மௌலீஸ்வரன் என்பவரிடம் 4000 ரூபாயை பறிமுதல் செய்தனர். இருவரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க பணத்தை எடுத்து வந்ததாக போலீசாரிடம் ஒப்புக்கொண்டனர். மேலும் சோதனையில் கணக்கில் வராத 25 ஆயிரத்து 300 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், லஞ்சம் வாங்கியது தொடர்பாக ஆவணங்கள் உள்ளதா என ஆய்வு செய்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.