Categories
திருப்பூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்…. திருப்பூர் மக்களின் எதிர்ப்பார்ப்புகள் என்ன…?

கொங்கு மண்டலத்தில் அமைந்திருக்கும் திருப்பூர் தமிழ்நாட்டின் 6-வது பெரிய நகரமாகும். 2008ஆம் ஆண்டு மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட திருப்பூரில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. திருப்பூர் மாநகராட்சியில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 7,12,770 ஆகும்.

திருப்பூரின் பொருளாதாரம் பருத்தி பொருட்கள், பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடை உற்பத்தியை பெருமளவில் சார்ந்துள்ளது. தமிழ்நாடு மாநகராட்சிகளில் அதிக வரி வருவாய் ஈட்டுவதில் திருப்பூர் 5-வது இடத்தில் இருக்கிறது. ஆனாலும் மொத்தமுள்ள 60 வார்டுகளில் பெரும்பாலானவற்றில் குடிநீர்தான் அடிப்படைப் பிரச்சினையாக உள்ளது.

நாள்தோறும் மக்கள் தொகை பெருகி வரும் நிலையில் அதற்கு ஏற்ப தண்ணீர் கிடைப்பதில்லை என்று ஊர் மக்களின் ஆதங்கமாகும். 3 வகையான குடிநீர் திட்டங்கள் கொண்டு வரப்பட்ட போதிலும் தீர்வு கிடைக்கவில்லை என்று கூறுகிறார்கள் திருப்பூர் மக்கள்.

பல இடங்களில் விரிவாக்க பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகள் அப்படியே கிடப்பதாக கூறுகிறார்கள் திருப்பூர் மக்கள். இதுபோதாது என்று பாதாள சாக்கடை திட்டமும் முழுமை அடையவில்லை என்பது அவர்களது ஆதங்கம் ஆகும்.

பாதாள சாக்கடைகாக தோண்டப்பட்ட பள்ளங்கள் அப்படியே கிடப்பதால் மழைக்காலத்தில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். திருப்பூர் மாநகராட்சியுடன் அதனை சுற்றியுள்ள பகுதிகள் சேர்க்கப்பட்டிருப்பதால், நகரம் விரிவடைந்து தேவை அதிகரித்துள்ளது. ஆகவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்படுவோருக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் குறிப்பாக திருப்பூரில் பார்த்தீர்களென்றால் 10 நாள், 15 நாள் கூட தண்ணீர் வராத நிலை இருக்கிறது, குடிக்கிற தண்ணீர் கடுமையான பிரச்சனையாக இருக்கிறது. இப்போது மாநகராட்சி தேர்தல் முடிந்து வரக்கூடிய மேயர் கவுன்சிலர்கள், எல்லாம் எதிர்கால சவாலாக என்ன இருக்கும் என்று பார்த்தால் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பது சவாலாக இருக்கும்.

இப்போது பிரதான பிரச்சினை என்னவென்றால் ரோடு, ரோடு எல்லா பக்கமும் குழிதோண்டி போட்டு பல நாள் ஆகியும் எந்த வேலையும் நடக்காமல் ரொம்ப பொதுமக்கள் அவலப்படுகிறார்கள். போக்குவரத்திற்கு மிகவும் சிரமமாக இருக்கிறது. ஸ்ரீசக்தி தியேட்டர் ரோடு, வளம்பாலம் ரோடு எல்லா பகுதிகளிலும் சாலைகளை தோண்டி போடுகிறார்கள், அதை  உடனே வேலை செய்ய மாட்டார்கள் போக்குவரத்து ரொம்ப பாதிக்கப்படுகிறது என தெரிவித்தனர்.

 

Categories

Tech |