பழனி நகராட்சி பணியாளர் மீது பாலியல் புகார் எழுந்துள்ள நிலையில், அது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி நகராட்சியில் கொசு ஒழிப்பு, துப்புரவு பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பெண் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் பழனி நகராட்சி ஊழியர்கள் மேற்பார்வையில் வேலை பார்க்கிறார்கள். இந்நிலையில் பழனி நகராட்சியில் கொசு ஒழிப்பு பணியில் வேலை பார்க்கும் ஒரு பெண் தொழிலாளிக்கு, நகராட்சி பணியாளர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்துள்ளது. அது குறித்து வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில் அந்தப்பெண் பேசியதாவது, நகராட்சி பணியாளர் தனக்கு மட்டுமில்லாமல் மற்ற பெண்களுக்கும் பாலியல் தொந்தரவு கொடுக்கிறார். மேலும் வேலை பார்க்கும் பெண்களை அசிங்கமாகவும், தரக்குறைவாக பேசுகிறார். ஆதலால் அவர் மீது உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.