திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குட்டத்துஆவாரம்பட்டி பகுதியில் அந்தோணி வில்லியம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தெய்வானை என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 1/2 வயதுடைய ஓவியா என்ற மகள் இருந்துள்ளார். நேற்று காலை கணவன் மனைவி இருவரும் வீட்டிற்கு அருகில் இருக்கும் தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். இதனையடுத்து அருகே விளையாடி கொண்டிருந்த ஓவியா திடீரென காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த தம்பதி மகளை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர்.
அந்த தோட்டத்தில் குப்பைகள் கொட்டுவதற்காக 3 அடி ஆழத்திற்கு தோண்டப்பட்ட குழி தொடர் மழை காரணமாக தண்ணீர் தேங்கி குட்டையாக மாறியது. அந்த தண்ணீரில் குழந்தை மயங்கி கிடந்ததை பார்த்த தம்பதி உடனடியாக மகளை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர் அவள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.