தேசிய தொழுநோய் எதிர்ப்பு தினத்தன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் காந்தியின் நினைவு நாளான ஜனவரி 30ஆம் தேதி தேசிய தொழுநோய் எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேசிய தொழுநோய் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதற்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தலைமை தாங்கியுள்ளார். அப்போது நிகழ்ச்சியில் கலந்து கொண்டர்வர்கள் தொழுநோய் குறித்த உறுதிமொழியை ஏற்று கொண்டனர். இதனையடுத்து தொழுநோயால் பாதிக்கப்பட்ட மாற்று திறனாளிகளுக்கு செயற்கை கால் மற்றும் உபகரணங்களை வழங்கினார்.
மேலும் தொழுநோயாளிகளை கண்டுபிடிக்கும் பணியில் சிறப்பாக பணியாற்றிய தனியார் கல்லூரியை சேர்ந்த 3 மாணவிகளுக்கு நற்சான்றிதல்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தொழுநோய் குறித்து மருத்துவர்கள் கூறுகையில், தொழுநோய் காற்றின் மூலம் பரவக்கூடியது, எனவே நோயின் ஆரம்ப அறிகுறிகளான உணர்ச்சியற்ற, வெளிர்ந்த மற்றும் சிவந்த தேமல் போன்று இருந்தால் அதனை உதாசீனப்படுத்தாமல் மருத்துவமனைக்கு சென்று உரிய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளனர்.
இந்த நோய் ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டால் 6 மாதத்தில் இருந்து 1 வருடத்திற்குள் சிகிச்சை அளித்து முற்றிலுமாக குணப்படுத்த முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அப்போது நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் சாந்தா அருள்மொழி, காசநோய் துணை இயக்குனர் வாசுதேவன், தொழுநோய் துணை இயக்குனர் ஜெயந்தினி, மருத்துவர்கள் மற்றும் தொழு நோயாளிகள் என பலரும் பங்கேற்றனர்.