தொழிலாளி தவறவிட்ட பர்சை மீட்டு ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனரை துணை போலீஸ் சூப்பிரண்டு பாராட்டியுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அருகில் அழகுசேனை பகுதியில் வசித்து வருபவர் புருஷோத்தமன் (40). இவர் தச்சு தொழிலாளியாக இருந்து வருகிறார். இவர் நேதாஜி மார்க்கெட்டில் பொருள் வாங்குவதற்காக நியூ சிட்டிங் பஜார் ரோட்டில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென்று எதிர்பாராத விதமாக அவருடைய பர்ஸ் தவறிவிட்டது. அந்த பர்ஸில் ரூ 11,000 மற்றும் ஏ.டி.எம், பான் கார்டு இருந்தது.
இதுதொடர்பாக புருஷோத்தமன் வேலூர் வடக்கு குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதற்கிடையில் வேலூர் சேண்பாக்கத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான மாவீரன் என்பவர் அந்த பர்ஸை கண்டு எடுத்துள்ளார். அதன்பின் அவர் உடனே அதனை வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
இதையடுத்து புருஷோத்தமனை காவல் நிலையத்துக்கு வரவழைத்து மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் முன்னிலையில் அவரிடம் பர்சை மாவீரன் கொடுத்தார். அதை வாங்கிக்கொண்டு புருஷோத்தமன் நன்றி தெரிவித்தார். இதையடுத்து மாவீரனின் நேர்மையை துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் காவல்துறையினர் பாராட்டினார்கள்.