தொழிலாளியை தி.மு.க பிரமுகர் கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள நடராஜபுரம் பகுதியில் தையல் தொழிலாளியான வடிவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுந்தரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். அதே பகுதியில் தி.மு.க பிரமுகரான ஈஸ்வரமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மதுபோதையில் விநாயகர் கோவிலில் அமர்ந்து தகராறு செய்து கொண்டிருந்த ஈஸ்வரமூர்த்தியை வடிவேல் தட்டி கேட்டுள்ளார். அப்போது கோபமடைந்த ஈஸ்வரமூர்த்தி கீழே கிடந்த கல்லால் வடிவேலை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதனால் மயக்கமடைந்த வடிவேலுக்கு அக்கம்பக்கத்தினர் தண்ணீர் கொடுத்து வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனை அடுத்து இரவு தூங்கி கொண்டிருந்த வடிவேல் நீண்ட நேரமாகியும் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து சென்று பார்த்த போது வடிவேல் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதனால் வடிவேலின் உறவினர்கள் ஈரோடு-காங்கயம் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த பிறகு உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் வடிவேலுவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஈஸ்வரமூர்த்தியை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.