கை மற்றும் கால்களை இழந்த ஒருவருக்கு அரசு மருத்துவர்கள் மறுவாழ்வு கொடுத்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வேப்பம்பாளையம் பகுதியில் கொத்தனாராக வேலை பார்க்கும் சுபாஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் சுபாஷுக்கு நடந்த ஒரு மின்சார விபத்தில் அவருடைய கைகள் மற்றும் கால்கள் தீயில் கருகியது. இதனால் சுபாஷ் தன்னுடைய கை மற்றும் கால்களை இழந்து தவித்து வந்தார். இது தொடர்பாக சுபாஷ் மாவட்ட ஆட்சியர் சமீரனை நேரில் சந்தித்து தனக்கு உதவி செய்யுமாறு கூறினார். இதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் சமீரன் மாவட்ட மறுவாழ்வு அலுவலர் வசந்தகுமார் மற்றும் கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா ஆகியோருக்கு ஒரு சம்மன் அனுப்பினார். அதில் தொழிலாளிக்கு செயற்கை கைகள், கால்களை பொருத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன்படி முட நீக்கியல் மற்றும் விபத்து நிறுவன இயக்குனர் மருத்துவர் வெற்றிசெழியன் தலைமையில் செயற்கை அங்கக வடிவமைப்பாளர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் குறைந்த எடையிலான 2 செயற்கை கைகள் மற்றும் கால்களை தயாரித்தனர். இதை தற்போது சுபாஷுக்கு பொருத்தி அரசு மருத்துவர்கள் சாதனை படைத்ததோடு, சுபாஷுக்கு மறுவாழ்வும் கொடுத்துள்ளனர். இந்த சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் ரூபாய் 2 லட்சத்து 50 ஆயிரம் வரையில் செலவாகும். ஆனால் அரசு மருத்துவமனையில் முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சுபாஷுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சுபாஷ் மாவட்ட ஆட்சியர் சமீரனை நேரில் சந்தித்து அவருக்கு நன்றி தெரிவித்தார். மேலும் செயற்கை கைகள், கால்கள் பொருத்தப்பட்டது தமிழகத்திலேயே இதுவே முதல் முறையாகும்.