தொழிலதிபரை கொலை செய்த வழக்கில் வளர்ப்பு மகள், மருமகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள தல்லாகுளம் சின்ன சொக்கிகுலம் கமலா 2வது தெருவில் வசித்து வந்தவர் தொழிலதிபர் கிருஷ்ணராம். இவருடைய மனைவி பங்கஜவல்லி. இவர்கள் இருவரும் கடை மற்றும் வீடுகளை வாடகைக்கு விட்டு அதில் வரும் வருமானத்தில் குடும்பம் நடத்தி வந்தார்கள். இத்தம்பதியினருக்கு குழந்தை இல்லாத காரணத்தினால் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து நிவேதா என பெயரிட்டு வளர்த்து வந்த நிலையில் நிவேதா ஓட்டலில் வேலை பார்த்த ஹரிகரன் என்பவரை காதலித்ததார். ஆனால் வீட்டில் எதிர்ப்பு தெரிவிக்க வீட்டிலிருந்து வெளியேறி நிவேதா ஹரிஹரனை திருமணம் செய்து கொண்டார்.
இதையடுத்து நிவேதா கர்ப்பமாக இருப்பதால் கிருஷ்ணராம் மனம் மாறி இருவரையும் வீட்டில் சேர்த்துக் கொண்டு அவர்களுக்கு ஜூஸ் கடையும் வைத்துக் கொடுத்த நிலைகளில் நிவேதா கணவருடன் சேர்ந்து கடைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததால் கிருஷ்ணராம் இருவரையும் கண்டித்திருக்கிறார். இதனால் நிவேதா வளர்ப்புத் தந்தையை தாக்கியதால் அவர் இருவரையும் வீட்டை விட்டு வெளியேற்றிய நிலையில் சென்ற 8 தேதி கிருஷ்ணராம் கத்திக்குத்து காயத்துடன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்துள்ளார். இதனால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்த நிலையில் வளர்ப்பு மகள் நிவேதா, அவரின் கணவர் என இருவரையும் கைது செய்து விசாரித்தார்கள்.
அப்போது நிவேதா கூறியுள்ளதாவது, “தனது கணவரையும் தன்னையும் தந்தை கண்டித்ததால் அவரை தாக்கி விட்டு வீட்டை விட்டு வெளியேறினோம். அதன்பின் தந்தைக்கு போன் செய்து மன்னிக்குமாறு கேட்டபொழுது அவர் தன்னை பார்க்க வரவேண்டாம் எனவும் சொத்தை முழுவதும் ட்ரஸ்ட் ஆரம்பித்து அதற்கு எழுதி வைப்பதாகவும் கூறினார். இதனால் தந்தை உயிரோடு இருந்தால் சொத்து தனக்கு கிடைக்காது என்பதால் அவரை கொலை செய்ய திட்டமிட்டு நான், கணவர் ஹரிஹரன், அவரின் நண்பர் சுரேஷ் உள்ளிட்டோர் சேர்ந்து கொலை செய்து விட்டு வீட்டில் இருந்த 23 பவுன் தங்க நகைகள், 71 ஆயிரம் ரூபாயை எடுத்துக்கொண்டு தப்பி சென்று விட்டோம்” என கூறியுள்ளார்.
மேலும் தலைமறைவாக இருந்த சுரேஷ் என்பவரையும் போலீசார் கைது செய்தார்கள். இச்சம்பவம் நடந்த 24 மணி நேரத்திலேயே குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு கமிஷனர் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.