நடிகர் சரத்குமார் கொரோனா பாதிப்பிலிருந்து விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோய் உள்ளன. அதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. பல்வேறு நாடுகளில் கொரோனா இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை வீசத் தொடங்கியுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.உலகில் உள்ள ஏழைகள், பணக்காரர்கள், அரசியல்வாதிகள், முக்கிய பிரபலங்கள் என்ற பாகுபாடு எதுவும் இல்லாமல் அனைவரையும் கொரோனா தாக்கி வருகிறது.
இந்நிலையில் நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமாருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை அவரது மனைவி ராதிகா மற்றும் மகள் வரலட்சுமி ஆகியோர் ட்விட்டரில் பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சரத்குமார் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். மேலும் வருகின்ற நாட்களில் அவரது உடல்நிலை குறித்து நான் உங்களிடம் தெரிவிப்பேன் என்று ராதிகா ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று செய்தி அறிந்ததும் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடல் நலம் குறித்து கேட்டறிந்தேன். அவர் விரைவில் பூரண குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.