இயற்கை வளங்களை ரசிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் இயற்கை வளங்கள் நிறைந்து காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கிறது. இதில் கோடநாடு காட்சி முனையும் ஒன்று. இந்தப் பகுதி கடல்மட்டத்திலிருந்து 6,500 அடி உயரத்தில் இருக்கிறது. இந்தப் பகுதியில் காட்சிக் கோபுரம் மற்றும் தொலைநோக்கு கருவி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சமவெளிப் பகுதியில் இருக்கும் பவானிசாகர் அணை, பவானி ஆறு, மேட்டுப்பாளையம், கொங்குமரஹடா கிராமம் ரங்கசாமி மலைச்சிகரம் மற்றும் அதிலுள்ள நீர்வீழ்ச்சி, மேற்கு தொடர்ச்சி மலை ஆகியவற்றை பார்த்து ரசிக்கின்றனர்.
இதனைத்தொடர்ந்து மலைச்சிகரங்களில் வைக்கப்பட்டுள்ள பறவைகள் மற்றும் விலங்குகளின் புகைப்படங்கள், பழங்குடியின மக்களின் வாழ்க்கை பற்றிய கலாச்சார புகைப்படங்கள் ஆகியவற்றையும் பார்த்து ரசிக்கின்றனர். தற்போது இந்த பகுதியில் மிதமான காலநிலை நிலவுவதால் குடும்பத்துடன் சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர். மேலும் இந்த பகுதியில் குழந்தைகள் விளையாடுவதற்கு ஒரு பூங்கா இருந்தால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.