தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை திமுக தொண்டர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச்சாவடிகளில் நேற்று காலை 7 மணி முதல் இரவு 7 வரை வாக்குப்பதிவு நடந்தது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கொரோனா பாதுகாப்பு விதி முறைகளை கடைபிடித்து மக்கள் அனைவரும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். அதில் சில வாக்குச்சாவடிகளில் இயந்திரக் கோளாறு காரணமாக வாக்கு தாமதம் ஏற்பட்டது. அதன்பிறகு வாக்கு இயந்திர கோளாறுகள் சரி செய்யப்பட்டு, மக்கள் அனைவரும் வாக்களித்தனர். அதிலும் சில கட்சிகள் பல பிரச்சனைகளை ஏற்படுத்தி கலவரம் செய்தனர்.
இந்நிலையில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் 72.78% வாக்குகள் பதிவானதாக தலைமை தேர்தல் அதிகாரி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதிகபட்சமாக தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியில் 87.33% வாக்குகள், குறைந்தபட்சமாக சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் 55.52% வாக்குகள் பதிவாகியுள்ளது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதனையடுத்து மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில் EVM மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள், CCTV வெளி ஆட்களின் நடமாட்டம் குறித்து தொடர்ச்சியாக கண்காணித்திட “டேர்ன் டூட்டி ” அடிப்படையில் திமுக தொண்டர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும். விதிமுறை மீறல்கள் நடந்தால் உடனே கட்சித் தலைமைக்கு தெரிவிக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.