அரசு ஒப்பந்ததாரர் பாண்டித்துரையின் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனையை தொடர்ந்து, அவரிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டையை சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் பாண்டித்துரை. இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலை துறையில் இளநிலை உதவியாளராக பணியாற்றியுள்ளார். அதன்பின்பு அந்த பணியை ராஜினாமா செய்து விட்டு முதலில் நெடுஞ்சாலை துறையில் ஒப்பந்தம் எடுத்துள்ளார். அதாவது சாலையோரங்களில் உள்ள மரங்களில் பெயிண்ட் அடிப்பதற்கான ஒப்பந்த வேலை.. அதன் பின்பு கடந்த ஆட்சியில் பெரிய அளவில் பல ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் எடுத்துள்ளார்.இந்த ஆட்சியிலும் பல்வேறு ஒப்பந்தங்கள் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வருமானத்தை விட பல கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் வருமானவரித்துறையினர் கடந்த 12ஆம் தேதி முதல் புதுக்கோட்டையில் உள்ள அவரது வீடு, அலுவலகம் மற்றும் தொழிற்சாலைகள், மனைவியின் பெயரில் உள்ள வணிக வளாகம் உள்ளிட்ட 8 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 12ஆம் தேதியிலிருந்து இரவு பகல் பாராமல் தொடர்ந்து மூன்றாவது நாளாக 30 பேர் கொண்ட வருமானவரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர்கள் சென்னை, திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து வந்து குழுக்களாக பிரிந்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையின் முடிவில் கணக்கில் வராத பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்படும் எனதெரிகிறது. அதன் அடிப்படையில் பாண்டித்துரை நேரில் அழைத்து விசாரணை நடத்த திட்டமிட்டனர். பாண்டித்துரை குடும்பத்துடன் கேரளாவில் இருந்தார் என கூறப்பட்ட நிலையில் வருமானவரித்துறை அழைப்பை ஏற்று புதுக்கோட்டை அலுவலகத்திற்கு வந்துள்ளார்.
அவரிடம் வருமானத்துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளார்கள். அதாவது, நெடுஞ்சாலைத்துறையில் என்ன மாதிரியான விதிமுறையை மீறி ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளது அரசு நிர்ணயித்த தொகைக்கு வேலை பார்த்து உள்ளார்களா? என்ன மாதிரியாக நடந்துள்ளது? இவர் வருமானத்தை விட பல கோடி மதிப்பிலான சொத்துக்கள் எவ்வாறு வாங்கினார்? புதுக்கோட்டையில் 10க்கும் மேற்பட்ட வீடுகள் பல நூறு ஏக்கர் நிலங்கள், 3 வணிக வளங்கள், அப்பார்ட்மெண்ட், கோவை மற்றும் பொள்ளாச்சி சொத்துக்கள் எவ்வாறு வந்தன? என விசாரணை நடைபெறுகிறது. இவர் மட்டுமல்லாமல் இவர் தொடர்புடைய நபர்களிடமும் 3 நாட்கள் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தார்கள்.
நெடுஞ்சாலைத்துறையில் ஒப்பந்தம் எடுத்து செய்த முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. பல்வேறு ஆவணங்கள் கிடைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணங்களை நேரில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணை என்பது இன்று மாலை நிறைவடையும் என தெரிய வருகிறது.