இந்திய அணியின் தீபக் ஹூடா பேட்டிங் செய்ய களம் இறங்காமலேயே ஒரு உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்..
இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரின் முதல் போட்டி நேற்று முன்தினம் ஹராரே மைதானத்தில் நடந்து முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே. எல்.ராகுல் பந்து வீச முடிவு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணி இந்திய பந்துவீச்சாளர்களின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் 40.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 189 ரன்கள் மட்டுமே எடுத்தது..
இதையடுத்து களம் இறங்கிய இந்திய அணி 30.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 192 ரன்கள் எடுத்து எளிதாக வென்றது. தவான் 113 பந்துகளில் 81 ரன்களும் (9 பவுண்டரி), சுப்மன் கில் 72 பந்துகளில் 82 ரன்களும் (10 பவுண்டரி, 1 சிக்ஸர்) எடுத்திருந்தனர். இந்த போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். தீபக் சாஹர் பிரசித் கிருஷ்ணா, அக்சர் பட்டேல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.. இந்த வெற்றியின் மூலம் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இப்போட்டியில் ஆல்ரவுண்டர் தீபக் ஹூடாவுக்கு பேட்டிங்கில் களமிறங்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ஏனெனில் விக்கெட் இழக்காமலேயே இந்திய அணி வென்று விட்டது.. ஆனாலும் பேட்டிங் செய்ய களம் இறங்காமலேயே ஒரு உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார் தீபக் ஹூடா.. அது என்ன சாதனை என்றால் இந்திய அணிக்காக தீபக்ஹூடா, கடந்த பிப்ரவரி மாதம் அறிமுகம் ஆகி இதுவரையில் 6 ஒருநாள் போட்டிகள் மற்றும் 9 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார்..
இப்படி இவர் களமிறங்கி விளையாடிய 15 போட்டிகளிலுமே இந்திய அணி வென்றுள்ளது. இதன் காரணமாக ஒரு வீரராக அணியில் இணைந்தது முதல் தொடர்ந்து வெற்றி கண்ட வீரர் என்ற சாதனை பட்டியலில் இவர் ரோமானியா வீரருடன் தற்போது சமநிலையில் இருக்கிறார்..
இன்று ஜிம்பாப்வே – இந்தியா அணிகளுக்கு இடையே 2ஆவது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. இதில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் தீபக் ஹூடா அதிக போட்டிகளில் வெற்றி பெற்ற வீரராக முதலிடத்திற்கு செல்வார் என்பது குறிப்பிடத்தக்கது.