உலகளவிலான விமான போக்குவரத்தில் 2022-ஆம் ஆண்டிற்கான சிறந்த விமான சேவைக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
உலகளவிலான விமான சேவை போக்குவரத்தில் 2022-ஆம் ஆண்டிற்கான சிறந்த விமான சேவைக்கான பட்டியல் கணக்கிட்டு வெளியிடப்பட்டுள்ளது. இதில் விமான சேவையின் தரம், சேவை, நிலைத்தன்மை அத்தோடு மட்டுமல்லாமல் புதிய வசதிகள், பயணிகளின் வசதி, பணியாளர்கள் சேவை மற்றும் பாதுகாப்பு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கத்தார் விமான சேவை ‘ஏர்லைன்ஸ் ஆப் தி இயர்’ தரவரிசை பட்டியலில் முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் கத்தார் நாட்டின் இதே விமான சேவை நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா கால கட்டத்திலும் மக்கள் சேவைக்காக கத்தார் ஏர்லைன்ஸ் விமான சேவை தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருந்தது. இந்த விமானத்தில் பயணிகள் சேவை, தொடர்ச்சியான விமான இயக்கம் உள்ளிட்ட காரணங்களால் கத்தார் ஏர்லைன்ஸ், உலகின் சிறந்த விமான சேவை இயக்கமாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பட்டியலில், ஏர் நியூசிலாந்து மற்றும் எதிஹாட் ஏர்வேஸ் போன்றவை இம்முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்துள்ளது. ஆஸ்திரேலியாவின் குவாண்டாஸ், குறிப்பாக பாதுகாப்பு அம்சத்தில், தொடர்ந்து உலகின் சிறந்த விமான நிறுவனங்களில் ஒன்றாக பெயரிடப்பட்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் நியூசிலாந்து, அமெரிக்கா, ஆசியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு விமான சேவையை வழங்கி வருகின்றது. குவாண்டாஸ், உலகின் சிறந்த பிராந்திய விமான சேவை நிறுவனம் என்றும் பெயரிடப்பட்டுள்ளது. மேலும் 20 இடங்களை கொண்ட இந்த பட்டியலில், ஏர் இந்தியா உள்ளிட்ட இந்திய நிறுவங்கள் எதுவும் இடம்பிடிக்கவில்லை.