திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தொடர்ந்து பெய்த கன மழையால் அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் “மலைகளின் இளவரசி” என அன்போடு அழைக்கப்படுகிறது. இங்கு நேற்று முன்தினம் பிற்பகல் 2.30 மணி முதல் அரை மணி நேரம் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்தது. இதையடுத்து மாலை 5 மணிக்கு கனமழை பெய்ய தொடங்கியது. இந்த மழை மாலை 6 மணி வரை நீடித்தது. இதேபோல் பலத்த மழை கொடைக்கானல் புறநகர் பகுதியிலும் கொட்டி தீர்த்தது.
இதனால் நட்சத்திர ஏரிக்கும், நகருக்கு குடிநீர் வழங்கும் அணைகளுக்கும் தண்ணீர் வரத்து தொடங்கியுள்ளது. இது மட்டுமில்லாமல் அங்குள்ள விவசாய பயிர்களுக்கு ஏற்ற வகையில் கோடை மழையாக இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதையடுத்து இதயத்தை வருடும் வண்ணம் இதமான வானிலை கொடைக்கானலில் நிலவியது. இதனால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.