ரஷ்யா மீது கூடுதல் பொருளாதார தடைகளை விதிக்க நேரிடும் என்று அமெரிக்க கருவூல செயலாளர் தெரிவித்துள்ளார் .
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் ரஷ்ய படைகள் மரியுபோல் நகரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் மருத்துவமனை மற்றும் பிரசவ வார்டுகள் உள்ளிட்டவை கடுமையாக சேத மடைந்து உள்ளன. இதனைத் தொடர்ந்து இந்த தாக்குதலுக்கு ஒரு குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 17 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக ரஷ்ய படைகளின் இந்த தாக்குதலில் மருத்துவமனையில் மக்கள், குழந்தைகள் இடிபாடுகளில் சிக்கி உள்ளதாகவும், இது மோசமான செயல் என்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபை பொது செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கொடூரமானது என்று கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இந்த தாக்குதல் குறித்து அமெரிக்க கருவூல செயலாளர் ஜேனட் யெலன் கூறியதாவது. “ரஷ்யாவின் அட்டூழியங்கள் உக்ரைன் மக்கள் மீது தீவிரமடைந்து வருகிறது, இதனால் அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகள் ரஷ்யா மீது கூடுதல் பொருளாதார தடைகளை விதிக்க கூடும். மேலும் இதுவரை விதிக்கப்பட்ட பொருளாதார தடைகள் அந்நாட்டின் பொருளாதாரத்தை “பேரழிவிற்கு உட்படுத்தியுள்ளன” என்று கூறியுள்ளார்.