கடலூர் துறைமுகத்தில் இருந்து 1000 க்கும் அதிகமான மீனவர்கள், 100 க்கும் மேற்பட்ட விசை மற்றும் பைபர் படங்களில் நாள்தோறும் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு சுமார் 60 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனையடுத்து கடலூர் மீன்வளத்துறை அதிகாரிகள், கடலூர் துறைமுகத்தில் நேற்று ஒலிபெருக்கி மூலம் பலத்த கடல் காற்று வீசப்படும் என்பதால், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் மறு உத்தரவு வரும் வரை கடலுக்குச் சென்று மீன் பிடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
அதனைதொடர்ந்து கடலில் தங்கி மீன் பிடித்து வரும் விசைப்படகு மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பெரும்பாலான மீனவர்கள் கரைக்கு திரும்பி விட்டனர். இருப்பினும் ஒரு சில மீனவர்கள் கரைக்கு திரும்பவில்லை, அவர்களும் விரைவில் திரும்புவார்கள் என்று மீனவர் ஒருவர் தெரிவித்தனர். அதே நேரத்தில் இன்று துறைமுகத்திலிருந்து யாருமே மீன்பிடிக்க செல்லவில்லை. படகுகள் அனைத்தும் கரைப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதனைப் போல பரங்கிப்பேட்டை, முடசல் ஓடை, அன்னங்கோவில் பகுதி மீனவர்களும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் தங்களுடைய படகுகளை அந்தந்த பகுதி கடற்கரையோரம் நிறுத்தி வைத்திருந்தனர்.