11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கொட்டையூர் காலனி பெருமாள் கோவில் தெருவில் பரந்தாமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜானகிராமன்(17) என்ற மகன் இருந்துள்ளார். இவர் பேரம்பாக்கத்தில் இருக்கும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். வருகிற 27-ஆம் தேதி பதினொன்றாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாக உள்ளது.
இந்நிலையில் தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் ஜானகிராமன் நேற்று முன்தினம் தனது வீட்டிற்கு அருகே இருக்கும் குளக்கரைக்கு சென்று அங்குள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் இது குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.