சிவகங்கையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக இதுவரை 41 வழக்குப்பதிவுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தனது செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது ;-
சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர், காரைக்குடி, மானாமதுரை, சிவகங்கை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் இந்த நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் முழு கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் 4 சட்டமன்ற தொகுதிகளிலும் 3 நிலையான கண்காணிப்புக்குழு, 1 வீடியோ பார்வையிடும் குழு, 3 பறக்கும் படை குழு, 4 வீடியோ மதிப்பீட்டு குழு வீதம் 24 மணி நேரமும் அனைத்து பகுதிகளிலும் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் மாவட்டம் முழுவதிலும் இருந்து பெறப்படும் புகார்களுக்கு தேர்தல் கட்டுப்பாட்டு அறை கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அவர்களுக்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்களுக்கு தேர்தல் ஆணையத்தால் செயல்படுத்தப்பட்டு வரும் வரும் சிவிஜில் இணையதளம் மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் தேசிய தகவலியல் மையம் மூலம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி 41 வழக்குகள் காவல் துறை மூலம் 23.3.2021 தேதி வரை விதிமுறை மீறல் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் 24 புகார்கள் 23.3.2021 தேதி வரை தொலைபேசி வாயிலாக பெறப்பட்டு பறக்கும் படையினர் , தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் மற்றும் வீடியோ மதிப்பீட்டு குழு ஆகியவற்றின் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தேர்தல் ஆணையத்தால் செயல்படுத்தப்பட்டு வரும் சிவிஜில் இணையதளம் வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேசிய தகவலியல் மையம் மூலம் இதுவரை 45 புகார்கள் பெறப்பட்டுள்ளது. மேலும் அதற்குரிய உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி கூறியுள்ளார்.