கடந்த பிப்ரவரி மாதம் 19-ஆம் தேதி மதுரை மாவட்டம் டி.கல்லுபட்டி பேரூராட்சியில் நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 22-ஆம் தேதி அன்று எண்ணப்பட்டது. அதில் 10-ஆவது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்ட பழனிச்செல்வியும், திமுக சார்பில் போட்டியிட்ட சுப்புலட்சுமியும் 284 வாக்குகளை பெற்றனர். இதன் காரணமாக வார்டு உறுப்பினர் தேர்தல் குலுக்கள் மூலம் நடத்தப்பட்டது. அதில் பழனிச்செல்வி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் அதிகாரி திடீரென திமுக வேட்பாளர் சுப்புலட்சுமி வெற்றி பெற்றதாக அறிவித்தார்.
இதையடுத்து பழனிச்செல்வி, தேர்தல் அதிகாரி அறிவிப்பை ரத்து செய்து தன்னை வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி பரத சக்கரவர்த்தி, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி ஆகியோர் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது குலுக்கள் மூலம் தேர்தல் நடந்தபோது பதிவான வீடியோ சமர்ப்பிக்கப்பட்டது. அதனை பார்வையிட்ட நீதிபதிகள், தேர்தல் அதிகாரி மனுதாரரை தான் வெற்றி பெற்றவராக அறிவித்திருக்க வேண்டும்.
இந்த தேர்தல் முடிவை அதிகாரி மாற்றியுள்ளது நிரூபணமாகியுள்ளது. உயர்நீதிமன்றம் தேர்தலை கண்காணித்த நிலையில் எப்படி அரசியல் கட்சி சார்பாக தேர்தல் அதிகாரி செயல்பட்டார் ? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் உடனடியாக சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் கடுமையான பின்விளைவுகளை மாநில தேர்தல் ஆணையம் சந்திக்க நேரிடும் என்று தெரிவித்தனர். அதன் பிறகு நீதிபதிகள், மாநில தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்பட்டிருக்க வேண்டும் என்று கூறி திருத்திய முடிவை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
மேலும் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரியை நேரில் ஆஜராகும்படி உத்தரவு பிறப்பித்தனர். இந்நிலையில் இன்று தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வில் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி நேரில் ஆஜரானார். இதற்கிடையே தவறான தேர்தல் முடிவை வெளியிட்ட தேர்தல் அதிகாரியை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். தேர்தல் முடிவை திருத்தி பழனிச்செல்வி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அதேசமயம் தேர்தல் அதிகாரி, அங்கிருந்தவர்களின் நிர்ப்பந்தம் காரணமாக திமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக மாற்றி அறிவித்ததாக பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். இந்நிலையில் நீதிபதிகள் தேர்தல் வெற்றியை மாற்ற நிர்பந்தம் அளித்தது யார் ? என்பது குறித்த விவரங்களை தேர்தல் அதிகாரி பிராமண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் திமுக வேட்பாளர் சுப்புலட்சுமி இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு, 10 நாட்களுக்கு வழக்கு விசாரணையை தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதேபோல் தேர்தல் அதிகாரி அடுத்த விசாரணையின் போதும் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.