தமிழகத்தில் நகராட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஜனவரி 28ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 4-ஆம் தேதி நிறைவடைய உள்ளது. அதோடு பிப்ரவரி 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிப்ரவரி 22ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்ய போதுமான கால அவகாசம் வழங்கப்படவில்லை என தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து விஜயகாந்த் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, “மாநில தேர்தல் ஆணையம் ஜனவரி 28ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கும் என ஜனவரி 26ஆம் தேதி மாலை அறிவித்துள்ளது. இதற்கு இடையில் ஒரு நாள் மட்டுமே கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் தங்கள் முடிவுகளை எடுக்க கூட நேரம் கொடுக்கப்படவில்லை. இது எந்த வகையில் நியாயம் இதற்கு முன்னர் நடந்த தேர்தல்களில் எல்லாம் எவ்வளவு நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டதோ அதேபோல்தான் தற்போதும் கொடுக்கப்பட வேண்டும்.
அதோடு தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவில் ஆளும் கட்சியின் தலையீடு உள்ளது என்பது அப்பட்டமாக தெரிகிறது. தேர்தல் அறிவிப்புகளை எல்லாம் இவ்வாறு அதிகார துஷ்பிரயோகம் செய்து திமுக எடுத்துவரும் இவ்வாறான நடவடிக்கைகள் மக்களை அதிருப்தி அடையச் செய்யும். மேலும் அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் வேட்புமனு தாக்கல் செய்ய கால அவகாசத்தை நீட்டித்து வழங்கினால் தான் வேட்பாளர்கள் தங்களை தயார் செய்ய ஏதுவாக இருக்கும்.” என அவர் கூறினார்.