நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மக்களின் விவசாயம் செய்து வருகின்றனர். அந்த மாவட்டத்தில் 60,000 சிறு விவசாயிகள் தேயிலை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் தற்போது மழையுடன் கூடிய தட்பவெட்ப நிலை நிலவுவதால் தேயிலை செடியின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்பட்டு கொப்புள நோய் தாக்கி வருகிறது.இந்த நோய் இளம் தண்டு மற்றும் தேயிலை கொழுந்த்தில் தாக்குவதால் 50% வரை மகசூல் குறைந்துள்ளதால் விவசாயிகள் மிகுந்த கவலையில் இருக்கின்றனர்.
இதுகுறித்து தேயிலை வாரிய அதிகாரிகள் கூறியது, கோத்தகிரியில் தற்போது மாறுபட்ட தட்பவெப்ப நிலை நிலவி வருவதால் கொப்புள நோய் தாக்கி வருகிறது. இந்த நோயை கட்டுப்படுத்த தேயிலை தோட்டங்களில் அதிக நிழல் தரும் மரங்களின் கிளைகளை அகற்றி தேயிலைச் செடிகள் மீது சூரிய வெளிச்சம் படுமாறு செய்ய வேண்டும்.அதுமட்டுமில்லாமல் செடிகளில் கொப்புள நோய் ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட இலைகள் மற்றும் கொழுந்துகளை கவாத்து மூலம் அகற்றிவிடவேண்டும். அதன்பிறகு எக்ஸோ கன்சோல் 200 மில்லி மற்றும் காப்பர் ஆக்ஸிகுளோரைடு 210 கிராம் ஆகியவை கலந்து 7 நாட்கள் இடைவெளி விட்டு தேயிலை செடி மீது தெளிக்கப்பட வேண்டும். அதனைப்போலவே பிராப்பிகானாசோல் 125 மில்லி மற்றும் காப்பர் ஆக்ஸிகுளோரைடு 210 கிராம் ஆகியவை கலந்து தெளித்தால் கொப்புள நோயை கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளனர்.