தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தேனி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். தேனி, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் ஏனைய உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸையொட்டி இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தேனி மாவட்டம் மஞ்சள்ஆறில் 9 சென்டிமீட்டரும் நீலகிரி மாவட்டம் பர்லியார் பகுதியில் 8 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.