பொள்ளாச்சியில் தேசிய அளவிலான போட்டிகளை நடத்தும் வகையில் ஸ்கேட்டிங் மைதானத்தில் கூடுதல் வசதிகளை செய்து தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் சர்வதேச அளவில் ஸ்கேட்டிங் மைதானம் அமைத்து தரவேண்டும் என்று மாவட்ட சறுக்கு விளையாட்டு சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். இதையடுத்து கடந்த 2016ஆம் ஆண்டு ஸ்கேட்டிங் மைதானம் அமைக்கும் பணி பொள்ளாச்சி மகாலிங்கபுரம் சமத்தூர் ராம ஐயங்கார் நகராட்சி பள்ளி மைதானத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்கேட்டிங் மைதானம் அமைக்க எம்.பி, எம்.எல்.ஏ மற்றும் நகராட்சி நிதி மூலம் ரூபாய் 80 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் மாணவ மாணவிகள் பங்கேற்க பயிற்சி பெற்று வருகிறார்கள். இந்த மைதானத்தில் வாரம்தோறும் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் 25 பேருக்கு பயிற்சி பெற்று வரும் நிலையில் கோவையை விட சிறப்பாக இந்த மைதானம் சர்வதேசதரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் கூடுதல் வசதிகளை செய்து தர வலியுறுத்தப்பட்டன. மேலும் இதுகுறித்து மாவட்ட சறுக்கு விளையாட்டு சங்க செயலாளர் சந்திரசேகர், சமூக ஆர்வலர்கள் பேசியதாவது, தமிழகத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற சிந்தட்டிக் ஸ்கேட்டிங் மைதானம் சென்னை, கோவை, பொள்ளாச்சியில் அமைந்துள்ளது. சென்னையை அடுத்து கோவையை விட பொள்ளாச்சியில் சர்வதேச அளவில் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி மைதானத்தில் 200 மீட்டர் ரிங் சுற்றிலும் சுவர் கட்டப்பட்டு, தார் ரோடு அமைக்கப்பட்டு சிந்தட்டிக் போடப்பட்டுள்ளது. மேலும் இந்த மைதானத்தில் பயிற்சி பெற்று மாநில தேசிய சர்வதேச அளவில் மாணவர்கள் போட்டியில் பங்கேற்க முடியும். இந்த மைதானத்தில் குடிநீர் வசதி, கேலரி வசதி, மின்விளக்கு உட்பட பணிகள் மேற்கொள்ள வேண்டி இருக்கின்றது. மேலும் வண்டிகள் அதிகமாக வருவதால் தார் ரோட்டின் ஸ்கேட்டிங் பயிற்சி செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மைதானத்திற்கு உள்ளே உடற்பயிற்சி கூடம், சாலை வசதி அமைத்து தரவேண்டுமென்று வலியுறுத்தப்பட்டுள்ளது.இது போன்று அனைத்து வசதிகளும் செய்து கொடுத்தால் பொள்ளாச்சியில் தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகளை நடத்தலாம். மேலும் இதுகுறித்து நகராட்சி தலைவர் ஆணையரிடம் வலியுறுத்தி இருக்கிறோம். அவர்களும் செய்து தருகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.