தெலுங்கானாவில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்ட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். தற்போது தெலுங்கானாவில் நோய் தொற்று பாதிப்புள்ளவர்களின் எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளது. தெலுங்கானாவில் இதுவரை ஒருவர் மட்டும் கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளதாக முதல்வர் தெரிவித்தார். மேலும் 20,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
காணொலி மூலம் மக்களை சந்தித்த அவர் கூறியதாவது, “ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தாமல் இருந்திருந்தால், நிலைமை மிகவும் மோசமாக மாறியிருக்கும் எனக் கூறினார். கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்க மக்கள் சமூகத்தில் இருந்து விலகி இருப்பது மிகவும் அவசியம் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், கச்சிபௌலி மைதானத்தில் தனிமைப்படுத்துதல் மையங்கள் விரைவில் திறக்கப்படும் என தெரிவித்தார். கிங் கொட்டி மருத்துவமனையில் தேவைப்படும் அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்படும் என கூறினார்.
தற்போதைய நிலவரப்படி, 11,000 பேரை தனிமைப்படுத்தி கண்காணிக்கூடிய அளவுக்கு வசதிகள் இருப்பதாகவும், விரைவில் 60,000 பேரை கண்காணிக்கும் அளவுக்கு வசதிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். மேலும் 1,400 பேர் ஐசியு வார்டில் வைத்து சிகிச்சை மேற்கொள்ளும் அளவிற்கு மருத்துவ உபகரணங்களும், மருத்துவமனைகளும் உள்ளதாக தெரிவித்தார். இதுவரை, 12,400 பேருக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும், 14,000 ஓய்வு பெற்ற மருத்துவர்களையும், மருத்துவ ஊழியர்களையும் பணியமர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.