தூய்மை பணியாளர்களுக்கு நிரந்தர ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கே.பாரதி என்பவரின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அதாவது நகர்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 190 ரூபாய் மட்டுமே சம்பளமாக வழங்கப் படுவதாகவும், நிரந்தர பணியாளர்களுக்கு 17 ஆயிரம் வரை ஊதியம் வழங்கப் படுவதாகவும் இருவரும் சம அளவிலேயே உழைக்கும் பட்சத்தில் எதற்கு இந்த சம்பள மாறுபாடு என கேட்டு உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் கே.பாரதி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்கள் மாற்றாந்தாய் மனப்பான்மையில் நடத்தப்படக் கூடாது என வலியுறுத்தினார். மேலும் தேசிய நகர்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கு நிரந்தர ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்குவது குறித்த திட்டத்தை 12 வார காலத்திற்குள் உருவாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.