தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த பெண்ணிற்கு கை துண்டாகி போனதால் நிவாரண உதவியாக ஒரு லட்சம் ரூபாய் அளிப்பதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நெல்லை மேலப்பாளையம் அருகே பாரதியார் தெருவில் வசித்து வருபவர்கள் பழனிச்சாமி மற்றும் அவரது மனைவி பாக்கியலட்சுமி (35). அவர் பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியில் மாநகராட்சி சார்பில் உள்ள இயற்கை உரம் தயாரிப்பு மையத்தில் மகளிர் சுயஉதவிக்குழு மூலம் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த மாதம் 28ம் தேதி பாக்கியலட்சுமி, மக்கும் குப்பைகளை தனியாக எடுத்து, பிரித்து அதை எந்திரத்தில் போட்டு அரைத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அவரது வலது கை எந்திரத்தில் சிக்கி துண்டாகி போனது.
இதை பார்த்த அருகில் உள்ளவர்கள் பாக்கியலட்சுமியை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு பாக்கியலட்சுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது பற்றி பழனிச்சாமி பெருமாள்புரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கை துண்டாக்கப்பட்ட பாக்கியலட்சுமி குடும்பத்திற்க்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு பிறகு, குப்பை பிரித்தெடுக்கும் இயந்திரத்தில் மாட்டி கை சிதைந்துபோன தூய்மை பணியாளர் பாக்கியலட்சுமிக்கு 1,00,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். மேலும் பாக்கியலட்சுமியின் மருத்துவ செலவு அனைத்தையும் அரசே ஏற்றுக்கொள்ளும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.