விவசாயி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள பக்கிரிமானியம் நடுத்தெருவில் விவசாயியான சந்திரன்(57) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கஸ்தூரி(50) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் சந்திரன் சாப்பிட்டுவிட்டு தனது வீட்டிற்கு முன்பு இருக்கும் திண்ணையில் படுத்து தூங்கியுள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் வந்த மர்ம நபர்கள் சந்திரனின் கழுத்தை சரமாரியாக அறுத்தனர். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதை பார்த்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.
இதில் படுகாயமடைந்த சந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று சந்திரனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், சந்திரனுக்கும் அவரது உறவினர்களுக்கும் இடையே நில பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது தெரியவந்தது. எனவே முன்விரோதம் காரணமாக சந்திரன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.