ஆட்டோ ஓட்டுநர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கழுத்தில் தூக்கு கயிறு மாட்டியவாறு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ராமநாதபுரத்தில் ஆட்டோ டிரைவரான தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்துவருகிறார். இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கழுத்தில் தூக்கு போடுவது போல கயிறு மாட்டிக் கொண்டு வந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் தமிழ்ச்செல்வனை மடக்கிப்பிடித்து கயிற்றை அகற்றிவிட்டனர். இதனை அடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தமிழ்ச்செல்வன் கூறியதாவது, எனது வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி எனது பாட்டியின் சிகிச்சைக்காக செலவழித்தேன். வாங்கிய கடன் தொகைக்கு மாதம் 1500 ரூபாய் வட்டி செலுத்தியுள்ளேன்.
இதுவரை 85 ஆயிரம் ரூபாய் வரை வட்டி பணம் கொடுத்துள்ளேன். இந்நிலையில் கடன் கொடுத்தவர் 8 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு பத்திரத்தை பெற்றுக் கொள்ளுமாறு மிரட்டுகிறார். இதுகுறித்து புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலை நீடித்தால் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வோம் என தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தி தமிழ்ச்செல்வனை அனுப்பி வைத்துள்ளனர்.