பாம்பன் தூக்குபாலத்தின் வழியாக 20க்கும் மேற்பட்ட கப்பல்கள் ஒன்றன் பின் ஒன்றாக சென்ற காட்சியை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து சென்றுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே பாம்பன் ரயில்வே தூக்குபாலம் உள்ளது. இந்த பாலத்தை கடந்து செல்வதற்காக கடந்த 2 நாட்களாக நாகபட்டினத்திலிருந்து தூத்துக்குடி கன்னியாகுமரி செல்வதற்கு 20க்கும் மேற்பட்ட ஆழ்கடல் மீன்பிடி படகுகளும், மங்களூருக்கு செல்வதற்கு கோட்டியா என்ற பாய்மர படகு ஆகியவை காத்திருந்துள்ளது. இதனையடுத்து பாம்பன் புதிய ரயில்வே பாலத்தின் பணிக்காக கேரளாவில் இருந்து வந்த சுமார் 50மீட்டர் நீளமும், 1200டன் எடையும் கொண்ட மிதவையை இழுத்து வந்த இழுவை கப்பல் ஒன்றும் காத்திருந்துள்ளது.
மேலும் நேற்று மதியம் 12.30 மணியளவில் பாம்பாம் ரயில் தூக்குபாலம் திறக்கப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து துறைமுக அதிகாரிகளின் அனுமதியோடு முதலில் பாய்மர படகு மற்றும் ஆழ்கடல் மீன்பிடி படகுகள் ஒன்றன் பின் ஒன்றாக தூக்குபாலத்தை கடந்து சென்றுள்ளது. இதற்குப்பின் கடைசியாக ரயில்வே பாலத்தின் பணிக்காக வந்த மிதவையை இழுத்தபடி வந்த இழுவை கப்பலும் தூக்குபாலத்தை கடப்பதற்கு தயாராக இருந்துள்ளது.
அப்போது மிதவையை இழுத்து வந்த இழுவை கப்பல் சற்று விலகியதால் பாலத்தை கடக்க முடியாமல் ஸ்தம்பித்து அப்படியே நின்றுள்ளது. இதனையடுத்து மீன்பிடி விசைப்படகுகளின் உதவியுடன் சுமார் 1/2 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு மெதுவாக தூக்குபாலத்தை கடந்து சென்றுள்ளது. இந்நிலையில் கப்பல்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்றதை ரோடு பாலத்தில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.