மத்திய உரம் மற்றும் ரசாயனத் துறை இணையமைச்சர் பகவந்த் கூபா கர்நாடக மாநிலத்திலுள்ள யாதகிரி மக்களை சந்திப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் இருந்த பாஜகவினர் அவருக்கு வித்தியாசமான முறையில் வரவேற்பு அளிக்க வேண்டும் என்பதற்காக வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு வரவேற்றுள்ளனர். இதை அங்கிருந்த ஒரு சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் முன்னிலையில் நிகழ்ந்த இந்த வரவேற்புக்கு பலரும் தங்களுடைய கடும் கண்டனத்தை தெரிவித்து வந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் பாபுராவ் சின்சனூர் உள்ளிட்ட 4 பேர் மீது கர்நாடக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதுமட்டுமின்றி பாதுகாப்பு பணியில் அலட்சியமாக செயல்பட்ட 3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.