குடிபோதையில் கர்பிணி பெண்ணை தந்தையே சுட்டு கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் மாதையன்தொட்டி என்ற கிராமத்தில் அருணாச்சலம் (60) மற்றும் அவரது மனைவி மாதேவி இருவரும் வசித்து வந்துள்ளனர். இவர்களது மகள் வெங்கடலட்சுமி (21). இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலம் மாலூரை சேர்ந்த சீனிவாசன் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. தற்போது வெங்கடலட்சுமி 3 மாத கர்ப்பமாக உள்ள நிலையில் யுகாதி பண்டிகை விருந்துக்காக அவரது கணவருடன் நேற்று மாதையன்தொட்டியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளனர்.
இதனையடுத்து சீனிவாசன் வெளியே போவதாக கூறி சென்றுள்ளார். அச்சமயத்தில் மதுபோதையில் வீட்டிற்கு வந்த அருணாச்சலம் தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். வெகுநேரமாக அவர்களது சண்டை தொடர்ந்த நிலையில் ஆத்திரமடைந்த அருணாச்சலம் தான் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை கொண்டு மாதேவியை சுட முயற்சித்துள்ளார். இதனைபார்த்து பயந்து போன அவரது மகள் வெங்கடலட்சுமி தாயை காப்பாற்றும் நோக்கில் குறுக்கே சென்றுள்ளார்.
அச்சமயத்தில் எதிர்பாராதவிதமாக துப்பாக்கியால் சுட்டதில் வெங்கடலட்சுமி உடலில் தோட்டாக்கள் பாய்ந்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக அவர் உயிரிழந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அருணாச்சலம் அங்கிருந்து உடனடியாக தப்பி ஓடினார். இதனைத்தொடர்ந்து துப்பாக்கி சுடும் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்து வீட்டார் அருணாசலத்தின் வீட்டிற்கு முன்பு குவிந்துள்ளனர்.
அங்கு வெங்கடலட்சுமி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த தகவலின்படி உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த வந்த காவல்துறையினர் வெங்கடலட்சுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவான அருணாசலத்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.