காவிரி கரையோர மக்கள் ஆற்றுக்கு செல்ல வேண்டாம் என ஊராட்சி நிர்வாகம் சார்பில் தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள கபினி கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியுள்ளது. இதன் காரணமாக இரண்டு அணைகளில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் கன அடிக்கு மேல் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு நீர் திறந்து விடப்பட்டிருக்கிறது. இந்த தண்ணீர் காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து கர்நாடகா தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லை வந்தடைந்துள்ளது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஐந்தருவி, சினி ஃபால்ஸ் போன்ற அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. அதிலும் குறிப்பாக ஐந்தருவி தெரியாத வகையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளதால் ஒகேனக்கல் வெள்ளக்காடாகி உள்ளது. இந்த தண்ணீர் சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு சென்றதால் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. மேலும் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் காவேரி நீர்த்தேக்க பகுதியான தர்மபுரி மாவட்டம் எரியூர், பூச்சூர், நாகமரை, பண்ணவாடி, ஏமனூர் போன்ற கரையோர கிராமங்கள் தீவு போல் காட்சியளிக்கின்றது. இதனால் காவிரி கரையோர மக்கள் ஆற்றில் குளிக்கவும், துணி துவைக்கவும், மீன்பிடிக்கவோ செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் வருவாய் துறையினர் மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.