நீட் தேர்வு அச்சத்தால் கடலூரைச் சேர்ந்த மாணவன் தனுஷ் தற்கொலை செய்து கொண்டதையடுத்து அரசியல் கட்சியினர் பலரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் பழி கூறிக்கொண்டு விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச். ராஜா, திமுக அரசு நீட் தேர்வு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பையும், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களையும் எதிர்ப்பது போன்ற தீய செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இதன் காரணமாக சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் தனுஷ் தற்கொலை செய்துள்ளார்.
இந்த மாணவரின் தற்கொலைக்கு முழுக்க முழுக்க முதலமைச்சர், திமுக, அதனுடைய கூட்டணி கட்சிகளே காரணம். சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பின்படி நீட் தேர்வு நடைபெற்று வருகிறது. இதனை மத்திய அரசே நினைத்தாலும் மாற்ற முடியாது. அப்படி இருக்கும் பட்சத்தில் தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் மாணவர்கள் மத்தியில் நீட் தேர்வு நடக்குமா? நடக்காதா? என்று குழப்பத்தை உருவாக்குகிறார்கள். அனைத்து மாநிலங்களிலும் நீட் தேர்வு நடைபெறுவதை யாரும் எதிர்க்கவில்லை. ஆனால் தமிழக சட்டசபையில் தற்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முதலமைச்சரின் பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது என்று தெரிவித்துள்ளார்.