தீபா வழக்கில் சிராஜுதீன் உட்பட இரண்டு பேர் கைது செய்ய வாய்ப்பிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளார்கள்.
ஆந்திர மாநிலத்தை பூர்விகமாக கொண்ட பிரபல நடிகை பவுலின் ஜெசிகா என்கின்ற தீபா திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர் விஷாலின் துப்பறிவாளன், ராட்சசன், தெறி உள்ளிட்ட திரைப்படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றார். இந்த நிலையில் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து போலீசார் தீபாவின் உடலை மீட்டு தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். அதில் தீபா எழுதிய கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர். இதை தொடர்ந்து தீபாவை காதலித்து வந்த உதவி இயக்குனர் சிராஜுதீன் என்பவரை போலீசார் விசாரணை செய்தார்கள். அவரிடம் தான் தீபா இறப்பதற்கு முன்பாக பேசியுள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சிராஜுதீன் கோயம்பேடு காவல் நிலையத்தில் ஆஜரானார். அப்போது போலீசார் அவரிடம் மூன்று மணி நேரம் விசாரணை மேற்கொண்டுள்ளார்கள். அப்போது அவர் போலீசாரிடம் கூறியுள்ளதாவது, நான் நடிகை பவுலின் ஜெசிக்காவை காதலிக்கவில்லை. அவர்தான் என்னை காதலித்து வந்தார். அவருக்கு நான் ஒரு நல்ல நண்பராக இருந்து வந்தேன். அவருக்கு தோல் சம்பந்தமான பிரச்சனை இருந்ததால் வேலப்பன்சாவடியில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பார்த்தேன். அது தொடர்பாக அவர் என்னிடம் அடிக்கடி பேசி வந்தார். நான் வாங்கிக் கொடுத்த செல்போனை எடுத்து வரும்படி எனது நண்பரிடம் நான் சொல்லவில்லை. தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக அவர் என்னிடம் தான் பேசி உள்ளார். ஆனால் அவர் தற்கொலை செய்து கொள்வார் என நான் நினைக்கவில்லை என அவர் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளார்கள்.
இதுப்பற்றி போலீசார் கூறியுள்ளதாவது, தீபா தற்கொலை அன்றுதான் அவரின் ஐபோன் காணவில்லை. ஆறு நாட்கள் கழித்துதான் பிரபாகரனிடம் இருந்து அந்த ஐபோன் மீட்கப்பட்டது. அதிலிருந்து தடையங்கள் அளிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகப்படுகின்றோம். சிராஜுதீன் சொல்லித்தான் அந்த ஐபோன் விவகாரம் மறைக்கப்பட்டிருக்கின்றது. அதனால் ஆதாரங்கள் தடயங்கள் அழிக்கப்பட்டு இருப்பது உறுதியானால் சிராஜுதீன் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த பிரபாகரன் உள்ளிட்டோர் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக போலீசார் கூறியுள்ளார்.