தீபாவளி பண்டிகை எப்படி கொண்டாட வேண்டும் என நம் முன்னோர்கள் வழிமுறைகளை வகுத்துள்ளார்கள்.
தீபாவளி பண்டிகை உலகம் முழுவதும் இருக்கும் இந்துக்களால் கோலகாலமாக கொண்டாடப்படுகின்றது. வட இந்தியாவில் தீபாவளி பண்டிகையை 5 நாட்கள் விமர்ச்சையாக கொண்டாடுவார்கள். தீபாவளி அன்று புத்தாண்டை அணிவது, இனிப்புகள் கொடுப்பது, பட்டாசு வெடிப்பது என்பது நம்மில் பலருக்கும் தெரிந்தது. ஆனால் தீபாவளியை கொண்டாடுவதற்கு என நம் முன்னோர்கள் சில வழிமுறைகளை வகுத்து வைத்துள்ளார்கள். தீபாவளி என்பது கொண்டாட்டத்திற்கான நாள் மட்டுமல்லாமல் தெய்வீக சக்திகளுக்கு இடையேயான பந்தத்தை உறுதிப்படுத்தக்கூடிய விரத நாளும்.
தீபாவளி பண்டிகைக்கு நாம் முதலில் வாங்குவது புத்தாடை தான். ஆனால் புத்தாடை வாங்கும் போது முழுமுதல் கடவுளான விநாயகருக்கு முதலில் ஒரு வஸ்திரம் எடுக்க வேண்டும் என்பதுதான் முறை. தீபாவளியன்று கோவில்களில் இருக்கும் தெய்வங்களுக்கும் புத்தாடை அணிவிப்பார்கள். தீபாவளி அன்று மற்றவர்களுக்கு இனிப்பு, புத்தாடை, பட்டாசுகள் உள்ளிட்டவற்றை கொடுப்பதன் மூலம் அடுத்த தலைமுறையினருக்கு இருப்பதை மற்றவர்களுடன் பகிர்ந்து வாழ வேண்டும் என்ற எண்ணத்தை ஊக்குவிக்கின்றது.
தீபாவளியன்று அதிகாலையில் எழுந்து கங்கா ஸ்நானம் செய்ய வேண்டும். அனைவராலும் கங்கையில் போய் நீராட முடியாது என்பதால் தான் ஒவ்வொரு தேவதைகளும் ஒவ்வொரு பொருளில் எழுந்தருளி மக்களுக்கு ஆசி வழங்குகின்றார்கள். தீபாவளி தினத்தன்று அதிகாலை 3 மணி முதல் 5.30 மணி வரை சுடுதண்ணீரில் கங்காதேவி வாசம் செய்கின்றாள். நல்லெண்ணெயில் மகாலட்சுமியும் சீயக்காயில் தேவர்களும் வாசம் செய்கின்றார்கள். இதனால் அதிகாலையில் எழுந்து நல்லெண்ணெய், சீயக்காய் வைத்து சுடுதண்ணீரில் குளிக்க வேண்டும் என்ற முறை வைக்கப்பட்டது.
இதன் வாயிலாக நம்முடைய பாவங்கள் நீங்கி கங்கையில் குளித்ததற்கு இணையான புண்ணியம் நம்மை வந்து சேர்வதுடன் மகாலட்சுமியின் அருளும் கிடைக்கும் என கூறப்படுகின்றது. கங்கை ஸ்நானம் முடிந்தபின் புத்தாடைகள், பலகாரங்கள், பட்டாசு உள்ளிட்டவற்றை சாமி படத்திற்கு முன் வைத்து படைத்து வணங்கிய பிறகு பெரியவர்களின் காலில் விழுந்து ஆசிப்பெற வேண்டும். தீபாவளி என்றால் தீபங்களின் வரிசை என்பது தான் பொருள். இதனால் தீபாவளியன்று வீட்டின் பூஜையறையில் குறைந்தது ஐந்து அகல் விளக்கில் தீபம் ஏற்ற வேண்டும். இப்படி வீட்டில் விளக்குகள் ஏற்றி தீபத்தின் ஒளியில் இறைவனை கண்டு வழிபட வேண்டும் என்பதே தீபாவளியாகும்.