மதுரை மாவட்டத்தில் உள்ள பரவை அம்மன் கோவில் தெருவில் இளங்கோவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்னபூரணம் என்ற மனைவி உள்ளார். இவர் சமயநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, மதுரை பரவை சங்கன்கோட்டை தெருவில் வசிக்கும் மாநகர குற்றப்புலனாய்வு போலீசில் சப்- இன்ஸ்பெக்டராக வேலை பார்க்கும் மோகன் குமார் அவரது மனைவி கஸ்தூரி ஆகிய 2 பேரும் கடந்த 4 வருடங்களாக தீபாவளி பொங்கல் சீட்டு நடத்தி வருகின்றனர். அவர்களிடம் சீட்டு சம்பந்தமான விவரங்களை கேட்பதற்காக சென்றபோது மாதந்தோறும் 1000 ரூபாய் கட்டினால் 12 மாதங்களுக்கு பிறகு 16 ஆயிரம் ரூபாய் தருகிறோம் என என்னிடம் கூறினர்.
அதனை நம்பி எனக்கு தெரிந்த 15 பேரை தீபாவளி சீட்டு திட்டத்தில் சேர்த்து விட்டேன். அவர்களை நம்பி நாங்கள் மாதந்தோறும் 17,000 ரூபாய் வீதம் 12 மாதங்களில் 2 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் செலுத்தியதோடு, பொங்கல் சீட்டு திட்டத்தில் மாதந்தோறும் 6400 ரூபாய் வீதம் 2 ஆண்டுகளுக்கு 1 லட்சத்து 53 ஆயிரத்து 600 ரூபாய் செலுத்தியுள்ளோம். இந்நிலையில் சீட்டு பணம் முதிர்வு தொகையை தருமாறு கேட்டபோது மோகன் குமாரும் கஸ்தூரியும் பணம் தர மறுத்து கொலை செய்து விடுவதாக என்னை மிரட்டுகின்றனர் எனவே பணத்தை மோசடி செய்த தம்பதி மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவான தம்பதியை தீவிரமாக தேடி வருகின்றனர்.