Categories
மாநில செய்திகள்

தீண்டாமை ஒழிப்பு விவகாரம்: ஊருக்குள் நுழையத் தடை?…. இதுவரை பயன்படுத்தாத பிரிவு…. அதிரடி முடிவு…..!!!!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள கிராமம் பஞ்சாகுளம்  கிராமத்தில் சென்ற 2 ஆண்டுகளுக்கு முன் கோவில் திருவிழா மற்றும் திருமண நிகழ்வின்போது இளைஞர்களுக்குள் ஏற்பட்ட சண்டையில் ஆதி திராவிடர் வகுப்பைச் சார்ந்த இளைஞர்களை மாற்று சமூகத்தைச் சார்ந்த இளைஞர்கள் ஜாதி ரீதியாக திட்டியதால் மாற்று சமூகத்தைச் சேர்ந்த 4 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டதில் இருந்தே ஆதிதிராவிட வகுப்பைச் சார்ந்த பெண்களையும், குழந்தைகளையும் மாற்று சமூகத்தை சேர்ந்தவர்கள் கேலி செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இது தொடர்பாக ஒரு பிரிவு ஊர் சமுதாயமக்கள் ஒன்று கூடி பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாகவும், இறுதியில் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதுவும் கடைகளில் கொடுக்கக்கூடாது எனவும் தீர்மானம்  போடப்பட்டதாக கூறப்படுகிறது. அதனடிப்படையில் ஊர்நாட்டமை மகேஷ்குமார் என்பவர் கடைக்கு வந்த ஒரு பிரிவு பள்ளி மாணவர்கள் தின்பண்டம் வாங்க வந்தபோது உங்களுக்கு பொருட்கள் தரமாட்டோம் எனக் கூறினார். அந்த காட்சியை வீடியோ எடுத்து சமுதாய நாட்டாமையான மகேஸ்வரன்(55) அவரது சமுதாய வாட்ஸ்அப் குரூப்பில் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இவ்வழக்கு குறித்து முதலாவதாக அதே பகுதியை சேர்ந்த ராமச்சந்திரமூர்த்தி என்பவரை கைது செய்த காவல்துறையினர், விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பதுங்கி இருந்த மகேஸ்வரனை 2வதாக கைது செய்தனர். அத்துடன் இந்த சாதிய தீண்டாமை விதைக்க உதவியாக இருந்த மளிகை கடையை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அவர்களின் உத்தரவின்படி அரசு அதிகாரிகள் இழுத்து மூடி சீல் வைத்தனர். இந்த விவகாரத்தில் 5 பேர் மீது இந்திய தண்டனைசட்டம் 153(A), 147,294,506, 153,377, உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து மகேஸ்வரன், ராமச்சந்திரமூர்த்தி ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய முருகன், குமார், சுதா ஆகியோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரையும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சங்கரன்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்விவகாரத்தில் எஸ்சி, எஸ்டி சட்டத்தின் முக்கிய பிரிவை பயன்படுத்த காவல்துறை முடிவுசெய்துள்ளது. தமிழகத்தில் இதுவரையிலும் இந்த பிரிவை ஒருமுறை கூட பயன்படுத்தியது இல்லை என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி இந்த பிரிவை பயன்படுத்தினால் குற்றம்சாட்டப்பட்டோர் குறிப்பிட்ட காலத்திற்கு பாஞ்சாங்குளம்  ஊரில் நுழைய தடைவிதிக்கப்படும் என தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க் தகவல் தெரிவித்துள்ளார். அத்துடன் சாதி ஒடுக்குமுறையை தடுக்கவும் , தொடர்ந்து பிரச்னைகள் ஏற்படாமல் இருக்கும் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அஸ்ரா கார்க் கூறியுள்ளார்.

Categories

Tech |