திருட்டு முயற்சியில் ஈடுபட்ட 50 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரியகுப்பம் பகுதியில் ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைந்துள்ளது. கடந்த 2011-ஆம் ஆண்டிலிருந்து இந்த ஆலை செயல்படாமல் இருக்கிறது. இந்த ஆலையில் ஏராளமான இரும்பு பொருட்கள் உள்ளது. இந்நிலையில் கண்ணன் என்பவர் நேற்று முன்தினம் ஆலைக்கு சென்றுள்ளார். அப்போது திடீரென ஆலையில் ஏதோ ஒரு சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த கண்ணன் சத்தம் கேட்ட இடத்திற்கு காவலாளிகளிடன் சென்று பார்த்துள்ளார். அப்போது மர்ம கும்பல் சிலர் இரும்பு பொருட்களை திருடி வண்டிகளில் ஏற்றிக் கொண்டிருந்தனர். இவர்களை காவலாளிகள் பிடிக்க முயற்சி செய்துள்ளனர்.
ஆனால் காவலாளிகளை கண்டவுடன் மர்ம கும்பல் 50 பேர் அங்கிருந்து தங்களுடைய வாகனங்களை விட்டுவிட்டு தப்பித்து சென்றுள்ளனர். இதுகுறித்து கண்ணன் புதுச்சத்திரம் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மர்ம கும்பல் விட்டு சென்ற மினி லாரி, ஆட்டோ மற்றும் 26 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். அதன்பிறகு காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் கடந்த சில நாட்களாக மர்ம கும்பல் இரும்பு பொருட்களை திருடியது தெரியவந்துள்ளது. அவர்கள் மொத்தம் 1,500 டன் இரும்பு பொருட்களை திருடியுள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.