தீக்குளிக்க போவதாக மிரட்டல் விடுத்த பெண் உடல் கருகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள சூலக்கரை வடக்கு தெருவில் பழனிச்சாமி(65) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துமாரி என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு முத்துமாரிக்கு ஈரக்கஞ்சன் என்பவருடன் திருமணம் நடைபெற்று, 3 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடித்துவிட்டு ஈரக்கஞ்சன் தினமும் முத்துமாரியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் குடிப்பழக்கத்தை நிறுத்தாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என முத்துமாரி கணவரை மிரட்டியுள்ளார். அதன்படி முத்துமாரி கடந்த சில மாதங்களுக்கு முன்பு ப்ளீச்சிங் பவுடரை குடித்துள்ளார். இதனை அடுத்து சிகிச்சைக்குப் பிறகு முத்துமாரி வீட்டிற்கு வந்துள்ளார். ஆனாலும் ஈரக்கஞ்சன் மது குடித்து வந்துள்ளார்.
இதனால் முத்துமாரி தனது கணவரை மிரட்டுவதற்காக உடல் முழுவதும் தின்னரை ஊற்றி தீக்குளிக்க போவதாக கூறியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக முத்துமாரியின் உடலில் தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முத்துமாரி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.