தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் அ. தி. மு. க. சார்பில் போட்டியிடும் அமைச்சர் ராஜலட்சுமியை ஆதரித்து நடிகர் கார்த்திக் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
அதில் அவர் பேசியதாவது:தமிழகத்தில் நிலையான ஆட்சி தந்துகொண்டிருக்கும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி தொடர வேண்டும். மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படும் அரசு அமைந்தால் தான், நமது மக்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்ய இயலும்.
39 எம். பி. க்களை வைத்துக் கொண்டு தமிழகத்திற்கு தி. மு. க. இதுவரை ஒன்றுமே செய்யவில்லை. தொடர்ந்து தி. மு. க. தமிழக மக்களுக்கு துரோகம் இழைத்துக் கொண்டிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத தி. மு. க. வினர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்று உங்களுக்கே தெரியும்..
அவர்கள் ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது. யார் தடுத்தாலும் இந்த கார்த்திக் நமது மக்களுக்காக போராடுவான். சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள் அனைவரும் அ. தி. மு. க. வேட்பாளர் வி. எம். ராஜலட்சுமிக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். தொடர்ந்து அங்கு கூடியிருந்த தொண்டர்களின்வேண்டுகோளுக்கு இணங்க ‘வெத்தல போட்ட சோக்குல’ எனும் பாடலை பாடி இரட்டை இலைக்கு ஓட்டு கேட்டார்.